சென்னையில் தடையில்லா மின் விநியோகத்துக்கு மின் பெட்டிகள் உயர்த்தி அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

சென்னையில் தடையில்லா மின் விநியோகத்துக்கு மின் பெட்டிகள் உயர்த்தி அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
Updated on
1 min read

சென்னை: சென்னையில் மின் பெட்டிகள் அனைத்தும் உயர்த்தி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகர் ராஜா, விருகம்பாக்கம் தொகுதியில் 138-வது வார்டு எம்ஜிஆர் நகர் மற்றும் 127, 128, 129, 136, 137 ஆகிய வார்டுகளில் புதை மின் வடம் திட்டம் செயல்படுத்தப்படுமா?

சென்னையில் மழை வந்தால், ஒரு அடிக்கு நீர் தேங்கினாலே, மின் பெட்டிகள் நீரில் மூழ்கி, மின்சாரம் துண்டிக்கப்படும். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மின் பெட்டிகளின் உயரத்தை அதிகரித்ததால், மழை காலங்களில் மின் தடை இல்லாத நிலை உள்ளது. அதேபோல் விடுபட்ட பகுதிகளிலும் மின் பெட்டிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? விருகம்பாக்கம் தொகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் 5 கோட்டங்களில் உயர், தாழ்வழுத்த மின் கம்பிகள் புதை மின் வடங்களாக மாற்றப்பட்டுள்ளன. கே.கே.நகர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை ஆகிய 3 கோட்டங்களில் மேல்நிலை மின் கம்பிகளை, புதை மின் வடங்களாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி வேண்டி கேஎஃப்டபிள்யூ நிறுவனத்திடம் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. நிதி கிடைத்ததும் உறுப்பினர் கூறிய வார்டுகளில் புதைமின் வடம் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் மழை காலங்களில் தடையின்றி மின் விநியோகம் செய்ய, மின் பெட்டிகள் 1 மீட்டர் உயரத்துக்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன. விடுபட்ட பகுதிகளிலும் மின் பெட்டிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். விருகம்பாக்கம் தொகுதியில் 5 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உறுப்பினர், 2 துணை மின் நிலையங்களை கேட்டுள்ளார். அதை அரசு கவனத்தில் கொள்ளும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in