தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 4.74 லட்சம் டன் நெல் கொள்முதல்: கடந்த ஆண்டைவிட ஒரு லட்சம் டன் அதிகம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கிடங்குகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கிடங்குகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 4.74 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 1 லட்சம் டன் அதிகம் ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பா பருவத்தில் 3.22 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டது. இதில், நேற்று முன்தினம் வரை 3.17 லட்சம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய ஏதுவாக மாவட்டம் முழுவதும் 597 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், நேற்று முன்தினம் வரை 4.74 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ கிரேடு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,450-ம், பொது ரகத்துக்கு ரூ.2,405-ம் வழங்கப்பட்டது. இதன்படி, 1,08,819 விவசாயிகளுக்கு ரூ.1,134 கோடி வங்கி கணக்கு மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை ரயில் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் அரைவை ஆலைகளுக்கும் நெல் அனுப்பி வைக்கப்பட்டு, அந்த நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியை, மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 4.74 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் கடந்தாண்டைவிட 1 லட்சம் அதிகமாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா பருவத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாடு வட்டாரத்தில் 97,737 டன்னும், குறைந்தபட்சமாக பேராவூரணி வட்டாரத்தில் 13,889 டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஏப்ரல் 15-ம் தேதி வரை நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக 220 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைய வேண்டும். இந்தாண்டு இலக்கைத் தாண்டி கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in