புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறையை அமைக்க ஆளுநரிடம் பாரதிதாசன் பேரன் கோரிக்கை

புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறையை அமைக்க ஆளுநரிடம் பாரதிதாசன் பேரன் கோரிக்கை
Updated on
1 min read

புதுச்சேரி: உலகத் தமிழ் மாநாட்டை புதுச்சேரி தமிழறிஞர்களைக் கொண்டு நடத்துவதுடன் புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைக்க வேண்டும். பாரதிதாசன் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் பாரதிதாசன் பேரன் பாரதி கோரிக்கை வைத்தார்.

புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை பாரதிதாசன் பேரனும், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கவிஞர் கோ.பாரதி ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். அப்போது அவர் ஆளுநரிடம் சில கோரிக்கைகளை அளித்தார். அது தொடர்பாக அவர் கூறியது: “புதுச்சேரி வளர்ச்சிக்கும், புதுச்சேரி மக்கள் பயன்பாட்டுக்கும் ஏதுவாகச் சென்னை - புதுச்சேரி - கடலூர் வழியிலான கிழக்குக் கடற்கரைச்சாலை ரயில் போக்குவரத்து விரைந்து அமைக்கப்படவேண்டும்.

உலகத் தமிழ் மாநாட்டை புதுவைத் தமிழறிஞர்களைக் கொண்டு விரைவில் நடத்த வேண்டும். புதுச்சேரியில் கணினித் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் வெளி மாநிலங்களில் வேலைக்குச் சென்று வருவாய் ஈட்டுகின்றனர். தங்கள் பெற்றோர், உற்றார் உறவினரைப் பிரிந்து பல இன்னல்களுக்கு நடுவே தனியே வசிக்கும் அவர்களுக்கு உதவியாக அவர்கள் புதுச்சேரியில் இருந்தே பணி ஆற்றும் வகையில் தொழில்நுட்பப் பூங்கா விரைவில் ஏற்படுத்தித் தரவேண்டும்.

புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைக்க வேண்டும். பாரதிதாசன் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் நீர்நிலைகளைக் காக்க வேண்டும். இடையூறும் நெருக்கடியும் இல்லாத போக்குவரத்துக்கான வகை செய்யவேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை தோற்றுவிக்க வேண்டும். மகளிர் பாதுகாப்புக்காக‌ காவல் துறையில் தனியாக ஓர் அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in