Published : 28 Mar 2025 05:06 PM
Last Updated : 28 Mar 2025 05:06 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த ஒன்றரை மாதங்களாக நிறுத்தப்பட்டதால், சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கி, மீண்டும் வேலையை தொடங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏரிகள் தூர்வாருதல், கால்வாய் அமைத்தல், வேளாண்மை பணிகள், பண்ணைக்குட்டை அமைத்தல், நீர்நிலைகளை பராமரித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் ஏராளமான கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது, இந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம் வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டும், ஒரு சில இடங்களில் பணிகள் நடைபெறுவதும் இல்லை.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மாதனூர், நாட்றம்பள்ளி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 208 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த திட்டத்தின் மூலம் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியில் திருப்பத்தூர் மாவட்டம் உலக சாதனை படைத்தது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 44 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இப்பணிகள் எங்குமே நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டும் இல்லாமல், ஏழை,எளிய தொழிலாளிகள் வேலை இல்லாமல் வருமானத்தை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஏற்கெனவே வேலை பார்த்த நாட்களுக்கு கூலியும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், 100 நாட்கள் வேலை திட்டத்தை நம்பியுள்ள ஆண், பெண் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘100 நாள் வேலை திட்டம் மூலம் கிடைக்கும் பணம் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 நாள் வேலை திட்டத்தில் எங்குமே பணிகள் நடைபெறவில்லை.
மேலும், ஏற்கெனவே, வேலை பார்த்த ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. தற்போது, இந்த வேலையும் இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எங்களின் குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியை மீண்டும் தொடங்குவதற்கும், பாக்கி உள்ள ஊதியத்தை வழங்குவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டப்பணிகள் கடந்த ஒரு மாதமாக தான் நடைபெறவில்லை. திருப்பத்தூர் மாவட்டத்துக்கு கொடுக்கப்பட்ட இலக்கினை விட அதிகமாக பணிகள் செய்துள்ளோம். இதனால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இப்பணியில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்காமல் நிலுவை தொகை அதிகமாக உள்ளது. இதனை, தொழிலாளர்களுக்கு பெற்றுத்தரவும், 100 நாள் திட்ட பணியை தொடங்கவும் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில், இப்பணிகள் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT