Published : 28 Mar 2025 03:30 PM
Last Updated : 28 Mar 2025 03:30 PM

செந்தில் பாலாஜிக்கு எதிரான 3 வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணமோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மூன்று வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-15 காலகட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 3 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி- எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 3 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக இன்று (மார்ச் 28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், 600-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையை முடிக்கவே பலஆண்டுகளாகும் என்பதால் இந்த வழக்குகளை தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்,” என வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், “இந்த 3 வழக்குகளின் குற்றச்சாட்டுகள் ஒரே மாதிரியானவை என்பதால் தான் இந்த 3 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது,” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், “மனுதாரர் இந்த வழக்கின் மூன்றாம் நபர். இந்த வழக்குகளை தனித்தனியாக விசாரித்தால் தான் காலநேரம் விரயமாகும். எனவே தான் இந்த வழக்குகளை சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதில் எந்த தவறும் இல்லை”, என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மூன்று வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, இந்த வழக்குகளை ஒன்றாக விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x