கல்​லீரல் செயலிழப்​பு, பித்த நாள பாதிப்பு இளைஞருக்கு மாற்று ரத்​தப் பிரிவு கல்​லீரல் பொருத்தி மறு​வாழ்வு: மியாட் மருத்​து​வ​ர்கள் சாதனை

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பித்த நாள பாதிப்புக்குள்ளான இளைஞருக்கு மாற்று ரத்தப்பிரிவு கல்லீரலை பொருத்தி, மியாட் மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்தனர். குணமடைந்த இளைஞரை வாழ்த்திய மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் மற்றும் மருத்துவர்கள்.
கல்லீரல் செயலிழப்பு மற்றும் பித்த நாள பாதிப்புக்குள்ளான இளைஞருக்கு மாற்று ரத்தப்பிரிவு கல்லீரலை பொருத்தி, மியாட் மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்தனர். குணமடைந்த இளைஞரை வாழ்த்திய மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் மற்றும் மருத்துவர்கள்.
Updated on
1 min read

சென்னை: 'தன்னுடல் தாக்கு' நோயால் கல்லீரல் செயலிழப்பு, பித்த நாள பாதிப்புக்குள்ளான இளைஞருக்கு மாற்று ரத்தப் பிரிவு கல்லீரலை பொருத்தி மியாட் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னையில் மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், கல்லீரல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை திட்ட இயக்குநர் டாக்டர் கார்த்திக் மதிவாணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரேம்நாத்(32). முன்னணி தனியார் இணைய வர்த்தக தளத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை, வயிறு மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அதற்கான காரணத்தை கண்டறிய முடியாததால் மியாட் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அவர் வந்தார்.

மருத்துவப் பரிசோதனையில் அந்த இளைஞருக்கு கல்லீரல் செயலிழப்பு மற்றும் பித்த நாள சிதைவு (பைல் டக்ட் டிசீஸ்) ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

உடலின் நோய் எதிர்ப்பாற்றலே எதிர்விளைவுகளை உருவாக்கும் 'தன்னுடல் தாக்கு' நோய் (ஆட்டோ இம்யூன் டிஸார்டர்) அவருக்கு இருந்தது. இதன் காரணமாகவே கல்லீரல் செயலிழப்பால் அவர் பாதிக்கப்பட்டார். உறுப்பு மாற்று சிகிச்சை மட்டுமே அதற்கு ஒரே தீர்வாக இருந்தது.

மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருக்க அவரது உடல்நிலை தாங்காது என்பதால், அவரது உறவினர்களிடம் இருந்து உடனடியாக கல்லீரல் தானம் பெற முடிவு செய்யப்பட்டது. அப்போது யாருடைய ரத்தப் பிரிவும் ஒத்துப்போகவில்லை. மேலும், நோயாளிக்கு ஏ நெகடிவ் வகையும், அவரது மனைவிக்கு பி பாசிட்டிவ் வகையும் ரத்தப் பிரிவு இருந்தது.

இளைஞரின் குடும்பப் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மியாட் மருத்துவமனை வரலாற்றில் முதன்முறையாக மாற்று ரத்தப் பிரிவு கல்லீரலை தானமாகப் பெற்று அவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இளைஞரின் ரத்த பிளாஸ்மாவில் உள்ள எதிர்ப்பாற்றலானது புதிய உறுப்பை நிராகரிக்க வாய்ப்பிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு நோயாளியின் பிளாஸ்மா எதிர்ப்பாற்றல் குறைக்கப்பட்டது. குருதியேற்ற சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஜோஸ்வா டேனியல் தலைமையிலான குழுவினர் இதனை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

இதன்பிறகு, அவரது மனைவியிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரலின் ஒரு பகுதி வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 12 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையின் மூலமாக, அவர் நலம் பெற்றார். இப்போது, அவர்கள் சீராக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உறுப்பு மாற்று சிகிச்சை முழுமையாக கட்டணமின்றி அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. முதல்நிலை பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கு மிகக் குறைந்த அளவிலேயே அவருக்கு செலவு ஏற்பட்டது. காப்பீடு இல்லாமல் பிற மருத்துவமனைகளில் இத்தகைய சிகிச்சை மேற்கொண்டால், ரூ.50 லட்சம் வரை செலவாகக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in