கோயில்களில் உயிரிழப்பை தடுக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு உறுதி

கோயில்களில் உயிரிழப்பை தடுக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு உறுதி
Updated on
1 min read

கோயில்களுக்கு வரும் பக்தர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின்னர் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், போளூர் தொகுதி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோர், "பழனி, திருச்செந்தூர், ராமேசுவரம், தஞ்சாவூர் உள்ளிட்ட கோயில்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன" என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து பேசியதாவது: திருச்செந்தூர், தஞ்சாவூர், பழநி, ராமேசுவரம் ஆகிய 4 கோயில்களிலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் விபத்தால் ஏற்பட்டதில்லை. உடல்நலக் குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள். அதுதொடர்பாக சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அதிகமாக கூட்டம் கூடும் கோயில்களில், மருத்துவ வசதி தேவை என்பதை உணர்ந்து, 2 கோயில்களில் இருந்த மருத்துவ வசதியை, 17 கோயில்களில் ஏற்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த 2023-ம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று நீதிபதி ஒருவர் உடல்நலக்குறைவால் மயக்க நிலைக்கு சென்று நிலையில், அவரை திருவண்ணாமலை கோயில் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் தான் காப்பாற்றினர். முக்கிய திருக்கோயில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 17 மருத்துவ மையங்களில் இதுவரையில் 7.16 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கோயிலில் உயிரிழந்தோர் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கு சூழ்நிலைக்கேற்ப கேட்ப நிதியுதவி வழங்கப்படும். வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in