

நெல்லையில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வீ.கருப்பசாமிபாண்டியன் (76) உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி பர்கிட் மாநகரை அடுத்த திருத்து பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளரான இவர் 1977-ல் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், 1980-ல் பாளையங்கோட்டை தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர், துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
2000-ம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். திமுகவிலும் முக்கிய நிர்வாகியாக வலம் வந்த கருப்பசாமி பாண்டியன், 2006-ல் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினரானார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட திமுக செயலராக பொறுப்பு வகித்து வந்த கருப்பசாமி பாண்டியன், கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து 2016-ல் விலகி, மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, மீண்டும் திமுகவில் இணைந்தார். 2020-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார்.
2 நிமிட மவுன அஞ்சலி: முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகியவரும், ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவருமான கருப்பசாமி பாண்டியன், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 1998-ல் நெல்லையில் கட்சி வெள்ளிவிழா மாநாடு எழுச்சியுடன் நடைபெற இவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை. அவரை இழந்து வாடும், அவரது மகனும், எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளருமான வி.கே.பி.சங்கருக்கும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.