Published : 26 Mar 2025 06:36 PM
Last Updated : 26 Mar 2025 06:36 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரி, சிமென்ட் குடோன்களுக்கு மத்தியில் பழைய கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. உயர் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள இக்கல்லூரிக்கு விரைவில் சொந்தக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், உயர் கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க அறிவிப்பு வெளியானதையடுத்து, 2022-ம் ஆண்டு திருக்காட்டுப்பள்ளி அருகே மோசஸ்புரம் என்ற இடத்தில் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
மேலும், பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏற்கெனவே செயல்பட்ட இடத்தில் கல்லூரி தற்காலிகமாக செயல்படத் தொடங்கியது. இங்கு பி.ஏ தமிழ், ஆங்கிலம், பிபிஏ., பி.காம், பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. தற்போது இங்கு 610 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இக்கல்லூரி காலை 9 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை என 2 ஷிப்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு முதல்வர், ஒரு நிரந்தர பேராசிரியர், 14 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், மாற்றுக் கல்லூரியிலிருந்து 4 பேராசிரியர்கள் அவ்வப்போது வந்து வகுப்புகள் எடுக்கின்றனர்.
கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தலா 4 கழிப்பறைகள், ஆசிரியர்களுக்கு 2 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. மேலும், பூதலூர் ஊராட்சி பகுதியில் அரசுப் பணிக்கு தேவையான சிமென்ட் மற்றும் இரும்பு கம்பி உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வைக்கும் குடோன்கள் இங்கு உள்ளன. இங்கு அவ்வப்போது சிமென்ட் மூட்டைகளை ஏற்றி, இறக்கும்போது சிமென்ட் துகள்கள் காற்றில் பறந்து மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தஞ்சாவூருக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருக்காட்டுப்பள்ளி அரசு கல்லூரிக்கான வகுப்பறை கட்டிடம் மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட மோசஸ்புரத்தில் அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளால் பணிகள் தொய்வடைந்துள்ளன.
இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் சிலர் கூறியது: இந்த கல்லூரி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தற்காலிக இடத்தில் தான் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்கெனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடம் பழுதானதால் கைவிடப்பட்டு, வேறு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு மாற்றப்பட்டது. ஆனால், அந்த பழைய கட்டிடத்தில் தான், சிமென்ட் குடோன்களுக்கு மத்தியில் போதிய வகுப்பறைகள், மைதானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளது வேதனை. கல்லூரி தொடங்க ஆர்வம் காட்டிய தமிழக அரசு, அதற்கான கட்டிடத்தை கட்டுவதற்கு அக்கறை காட்டவில்லை. எனவே, இந்த ஆண்டுக்குள் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்து, முதல் பேட்ஜ் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவுக்குள், பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரிக்கு மோசஸ்புரம் என்ற இடத்தில் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்ததும் கல்லூரி அங்கு செயல்படும். தற்போது பூதலூரில் செயல்படும் தற்காலிக இடத்தில் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT