

சென்னை: “2018-ம் ஆண்டு முதல் 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணம் குறித்து பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலமாக பதிவுத்துறை சார்பில் அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, திமுக எம்எல்ஏ எழிலன், “சுயமரியாதை திருமணம் செய்வதற்கு சில சார்பதிவாளர்கள் சமூக சூழலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இடர்பாடுகளை செய்கின்றனர். ஆணோ, பெண்ணோ பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றால் பலவகையான தடைகளை ஏற்படுத்தும் நிலை உள்ளது. திருமணம் முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விசா பிரச்சினையின்றி வெளிநாட்டுக்குச் செல்வதற்கு ஏதுவாக ஆன்லைன் மூலம் திருமணப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?”
இதற்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளிக்கையில், “சுயமரியாதை திருமணம் குறித்து 1955-ம் ஆண்டு இந்து திருமண பதிவு சட்டத்தின்படி சுயமரியாதை திருமணம் சேர்க்கப்பட்டு தற்போது வரை சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு முதல் 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணம் குறித்து பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலமாக பதிவுத்துறை சார்பில் அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை இணையதளப் பக்கத்தில் உள்சென்று திருமண பதிவுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அதற்கு உரிய கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பம் உருவாக்கப்படும். அதனை அச்சுப் பிரிதி எடுத்து திருமண பதிவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். பின்னர் இணையதளம் வழியாக பதிவு செய்வதற்கான நாள் மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்து ஒப்புகை சீட்டை பெறலாம்.
மேலும், பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழ்கள் திருத்தம் தேவைப்படின் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு நேரிலே வராமல் இணையம் வழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றுகளை பெறும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.