

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ராஜாஜி மருத்துவமனையில் தனிக் காவல்நிலையம் இருந்தும் அதில் பணியாற்றும் போலீஸார் பெரும்பாலானவர்கள் மாற்றுப்பணிக்கு வேறு இடங்களுக்கு சென்று விடுவதால், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 3,500 உள் நோயாளிகள், 15 ஆயிரம் வெளி நோயாளிகள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.
பார்வையாளர்கள், நோயாளிகள் உள்பட ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் வந்து செல்கிறார்கள். பொதுவாகவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் காவல்துறையினர் ரோந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே, அப்பகுதிகளை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து தினமும் போலீஸாருக்கு 'பீட்' ஒதுக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் விபத்து, கொலை மற்றும் பிற அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருவார்கள். அவர்கள் விவரம் சேகரித்து நிகழ்வுகள் நடந்த சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, அரசு மருத்துவமனைகளில் புறகாவல்நிலையங்கள் செயல்படும்.
ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள், பார்வையாளர்கள், பணியாளர்கள் வந்து செல்வதால் ஒரு காவல் ஆய்வாளர், 2 எஸ்.ஐ-க்கள் உள்பட தனி காவல் நிலையமே செயல்படுகின்றன.
ஆனால், மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படும் காவல்நிலையம் கடமைக்கு செயல்படுவதுபோல், மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் ரோந்துப்பணியில் முறையாக ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் சம்பந்தமில்லாத நபர்கள், வந்து மது அருந்துவிட்டு செல்வது, வளாகத்தில் தூங்குவது, இரு சக்கர வாகனங்களை விட்டுச் செல்வது போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் நடக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரவு பணி முடிந்து விடுதிக்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் மர்ம நபர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மதுரை அரசு மருத்துவமனையில் நடக்காவிட்டாலும், மருத்துவர்கள்-நோயாளிகள் மோதல் தொடர்ந்து நடக்கிறது. இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடக்கிறது. பெரிய குற்றச் சம்பவங்கள் நடக்கும் முன், அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள காவல்நிலையத்தை பலப்படுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மருத்துவர்கள் கூறுகையில்,''விபத்துகள் வழக்குப் பதிவுகளுக்கான விவரங்களை சேகரிப்பது, பிரேதப் பரிசோதனையில் பாதுகாப்பு வழங்குவது போன்ற பணிகளை மட்டும் போலீஸார் செய்கிறார்கள். மருத்துவமனை வளாகத்தில், வார்டு பகுதிகளில் போலீஸார் ரோந்து செல்வதே கிடையாது. காவல்நிலையத்தை விட்டு வெளியே வராமல் உள்ளே அமர்ந்து கொள்கிறார்கள். மருத்துவமனை தனியார் செக்கியூரிட்டி பணியாளர்களே மருத்துவமனைக்கு காவலாளிகள் போல் செயல்படுகிறார்கள். மருத்துவமனை காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸார் மாற்றுப்பணியில் வேறு இடங்களில் பணிபுரிய அனுப்பப்படுகிறார்கள். இந்த காவல்நிலையத்தில் திடகாத்திரமான போலீஸார் பணியமர்த்தப்படுவதில்லை. வயதானவர்களே பணிபுரிகிறார்கள்.'' என்றனர்.
மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மருத்துவமனையின் நுழைவுவாயில், வெளியேறும் பகுதிகளில் மருத்துவமனைக்கு சம்பந்தமில்லாதவர்கள் வருகையை கட்டுப்படுத்த இரு சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளோம். ஏப்ரல் முதல் 'பார்க்கிங்' கையும் முறைப்படுத்த உள்ளோம். மருத்துவமனையில் நுழைபவர்களை சோதனை செய்து அனுப்ப மருத்துவமனை காவல்நிலையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க, மாநகர காவல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம், '' என்றனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒரு காவல் ஆய்வாளர், 2 எஸ்ஐக்கள் உட்பட சிறப்பு எஸ்ஐக்கள், காவலர்கள் உள்பட 36 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 10 பேருக்கு மேல் மாற்றுப்பணி, பாதுகாப்பு என்ற அடிப்படையில் வெளியில் சென்றுவிடுவர். தினமும் 20 பேர் மட்டுமே பெரும்பாலும் பணியில் இருப்பர். இவர்களுக்குள் காலை 7 முதல் மதியம் 1, மதியம் 1 முதல் இரவு 9, இரவு 9 முதல் அடுத்தநாள் காலை 7 மணி என, 3 ஷிப்ட் முறையில் பணிபுரிகின்றனர். இவர்களில் அரசு மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் விபத்து சிசிக்சை பிரிவு, எதிரிலுள்ள பல்நோக்கு மருத்துவ பிரிவு தலா 3 காவல்துறையினர் தினமும் பணியில் இருக்கின்றனர்.
இது தவிர, மருத்துவமனைகளில் இரவு, பகல் என, ரோந்து, பிரேத பரிசோதனை அறை பணிகளிலும் தலா இருவருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மருத்துவமனை வளாகத்திற்குள் இரு சக்கரவாகனங்கள் திருட்டு போன்ற குற்றச் செயல்களை தடுக்க, மருத்துவமனை பிரதான நுழைவு வாயிலில் தினந்தோறும் உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களை பதிவிட மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்தால் ஓரளவுக்கு குற்றச் செயல்களை தடுக்க உதவியாக இருக்கும். ரோந்து செல்லாமல் இல்லை. குறைவான போலீஸார் இருப்பதால் மருத்துவமனையின் அனைத்துப்பகுதிகளுக்கும் செல்ல முடியவில்லை,'' என்றார்.