100 நாள் வேலை திட்ட நிதி நிலுவை: மத்திய அரசை கண்டித்து மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட நிதி நிலுவை: மத்திய அரசை கண்டித்து மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.4034 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வரும் மார்ச் 29-ம் தேதி திமுக சார்பில், அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த மார்ச் 9ம் தேதி அன்று , சென்னையில் நடைபெற்ற திமுக எம்.பிகள் கூட்டத்தில், பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை மத்திய அரசிடம் பெற வேண்டும். அத்துடன் மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.4034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

அவரது அறிவுரைக்கிணங்க, மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.4034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து மார்ச் 25-ம் தேதி அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும், தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் மார்ச் 29-ம் தேதி, சனிக்கிழமை காலை அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாவட்ட திமுக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், திமுக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழக அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பாஜக அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டும். தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்துக்கு உடனே தெரிவித்திட வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in