ஆவின் நிறுவன நெய்க்கு அமெரிக்காவில் அதிக மவுசு: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

ஆவின் நிறுவன நெய்க்கு அமெரிக்காவில் அதிக மவுசு: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
Updated on
1 min read

சென்னை: அமெரிக்காவில் ஆவின் நெய்க்கு அதிகளவில் மவுசு இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி) பேசுகையில், ``ஆவின் பொருட்களை சிறிய கிராமங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்து பேசும்போது, ``தமிழகம் முழுவதும் 300 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளன. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது. தமிழகத்தில் உற்பத்தியாகும் நெய் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. உலகச் சந்தையில் நமது ஆவின் நெய் ரூ.50 கூடுதலாக இருந்தாலும், அதைத்தான் அமெரிக்காவில் விரும்பி வாங்குகிறார்கள். ஆவின் பொருட்களை கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் எம்எல்ஏ சின்னதுரை (கந்தர்வக்கோட்டை) பேசுகையில், ``கறம்பக்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்'' என்றார்.

அதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளிக்கையில், ``தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி கொடுத்தால் கட்டித்தர முடியும். இதுதான் தற்போதைய நிலைமை. நிதிதான் தற்போதைய பிரச்சினையாக இருக்கிறது. பணம் கொடுத்தால் உடனே கட்டித் தருகிறோம்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in