ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலையா? - பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம்

ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலையா? - பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம்
Updated on
1 min read

சென்னை: தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை வைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஒரத்தநாடு எம்எல்ஏ ஆர்.வைத்தியலிங்கம் பேசும்போது, ‘‘தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 1972–ம் ஆண்டு சிலை வடிவமைக்கப்பட்டது. ஆனால், தொல்லியல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று உள்ளே சிலையை வைக்காமல் வெளியே வைத்தார்கள்.

ராஜராஜசோழனின் பெருமையை உணர்ந்து இந்திய கடற்படையின் திட்டங்களிலேயே அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள பெரிய கோயிலை கட்டிய அவருக்கு 100 அடி சிலை வைக்க வேண்டும்’’என்றார்.

இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்து பேசுகையில், ‘‘மன்னர்களின் புகழை போற்றி பாராட்டும் திமுக ஆட்சியில்தான் ஆயிரம் ஆண்டு சதயவிழா எடுக்கப்பட்டது.

தற்போது உறுப்பினர் வைத்துள்ள கோரிக்கை குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதற்கு வாய்ப்பிருந்தால் நிச்சயம் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in