Published : 26 Mar 2025 06:00 AM
Last Updated : 26 Mar 2025 06:00 AM
சென்னை: சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பன்னடுக்கு குடியிருப்புகளில் தண்ணீர் பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படு்ம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
சென்னையில் ரூ.560 கோடியில் 10 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டப் பணிகள் முடியும்போது மேலும் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள். கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பேரூரில் ரூ.4,276 கோடியில் நடைபெறும் 400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் முடியும்போது சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 23 லட்சம் மக்கள் பயனடைவர்.
சென்னை மாநகரிலுள்ள வணிக வளாகங்கள் மற்றும் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடங்களில் தண்ணீர் பயன்பாட்டைக் கணக்கிடுவதற்காக ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடையாறு மண்டலத்தில் உள்ள பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் குடிநீர் விநியோக நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் முறையை செயல்படுத்துவதற்கு ரூ.690 கோடியில் விரைவில் பணிகள் தொடங்கும்.
சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்காக 100 கி.மீ. நீளத்துக்கு முதன்மை சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டம் ரூ.2,423 கோடியில் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் 4 நிலையங்கள் என மொத்தம் 9 குடிநீர் வழங்கல் அமைப்புகளும் ஒன்றிணைக்கப்பட்டு சென்னை மாநகரத்தின் அனைத்து நீர் பகிர்மான நிலையங்களுக்கும் சமச்சீரான குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க முதல்கட்டமாக தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.750 கோடியும், விருதுநகர் நகராட்சிக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கப்படும்.
பேரூராட்சிகளில் அனைத்து பருவ காலத்திலும் பயன்படுத்தும் விதத்தில் ரூ.295 கோடியில் 360 கி.மீ. நீளமுள்ள மண் சாலைகள், தார்சாலை, கான்கிரீட், பேவர் பிளாக் சாலைகளாக மாற்றப்படும். சென்னையில் பேருந்து தட சாலைகளில் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
சென்னை வெள்ளத்தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக ரூ.95 கோடியில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களை தடுப்புச் சுவர் கொண்டு உயர்த்தவும், குப்பைகள் தேங்காமல் இருக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னையில் ரூ.120 கோடியில் நீர் நிலைகளை புனரமைத்து கொள்ளளவை அதிகரிக்கவும், வெள்ள பாதிப்பை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தாம்பரம் மாநகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை மேம்படுத்த ரூ.30 கோடியில் பொதுவான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். அனைத்து நகர்ப்புற, ஊரக பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஒரு தனி குறைதீர்வு மையம் உருவாக்கப்படும். புழலில் உள்ள 300 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.430 கோடியில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் புனரமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT