Last Updated : 29 Jul, 2018 10:03 AM

 

Published : 29 Jul 2018 10:03 AM
Last Updated : 29 Jul 2018 10:03 AM

காமராஜர் அடிக்கல் நாட்டிய திட்டம்; காவிரியின் குறுக்கே ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும்: காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டி 50 முதல் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும் என்பதால் அதற்கான பணிகளை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் இருந்து காவிரியில் எவ்வளவு தண்ணீர் திறக்கப்படுகிறது என்பது, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிலிகுண்டுலுவில்தான் கணக்கிடப்படுகிறது. இப்பகுதியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஆய்வு செய்தார். அதுபற்றி ‘இந்து தமிழ்’ செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:

கர்நாடக மாநிலம் குடகு மலையில் காவிரி உற்பத்தியாகி பல பிரிவுகளாக பிரிந்து வருகிறது.  கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி என 6-க்கும் மேற்பட்ட அணைகள், பல்லாயிரக்கணக்கான ஏரிகள் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களைக் கட்டி தண்ணீரை சேமிக்கிறது. உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்கு விடுவிக்கிறது. இதனால், தமிழகத்தில் சுமார் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர் இல்லாமல் பாலைவனமாகும் அபாயம் உள்ளது. குறுவை சாகுபடியை இழந்ததோடு, சம்பா சாகுபடியும் கேள்விக்குறி ஆகிவிட்டது. சுமார் 2 கோடி மக்களின் வாழ்வாதாரம், 25 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 5 கோடி பேரின் குடிநீர் தேவை ஆகியவை பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கோடை மழை, தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் அனைத்து அணைகளும் ஜூன் மாதத்திலேயே நிரம்பத் தொடங்கிவிட்டன. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியது. ஜூன் மாதத்துக்கு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தர கர்நாடகா மறுத்ததால் குறுவை சாகுபடியை தமிழக விவசாயிகள் முற்றிலும் இழந்தனர். ஜூன் மாதம் முதலே, தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடகா விடுவித்து கர்நாடக அணைகளின் தண்ணீர் அளவை அவ்வப்போது குறைத்திருந்தால், மேட்டூர் அணை நிரம்பி குறுவை சாகுபடிக்கு தண்ணீரை திறந்துவிட்டு பாசனம் பெற்றிருக்க முடியும்.  தற்போது தினமும் 7 டிஎம்சி வரை உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து  சேமித்திருக்க முடியும்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்துவரும் நிலையில், கடந்த 24-ம் தேதி எனது தலைமையில் 10 பேர் கொண்ட குழு மேட்டூர் அணையையும், ஒகேனக்கல் பகுதிகளிலும் காவிரியில் உபரி நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதையும் பார்வையிட்டோம். பின்னர், மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகா - தமிழகம் இடையே காவிரியில் தண்ணீர் அளவிடும் பிலிகுண்டுலு பகுதியை பார்த்துவிட்டு, அங்கிருந்து 8 கி.மீ. தூரம் அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக இருசக்கர வாகனத்திலும், நடந்தும் சென்று ராசிமணல் பகுதியை பார்வையிட்டேன். அப்போது அங்கு 1965-ம் ஆண்டில் காமராஜர் முதல்வராக இருந்தபோது புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி,  பணிகள் தொடங்கப்பட்டதற்கான அடையாளங்களும் இருப்பதைக் கண்டோம்.

ஒகேனக்கலில் இருந்து மேகதாது வரை சுமார் 60 கி.மீ. தூரம் வரை காவிரியின் இடதுகரை முழுவதும் தமிழக எல்லையாக உள்ளது.

வலது கரை கர்நாடக மாநிலத்துக்கு சொந்தம். தமிழக எல்லைப் பகுதியில் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணை கட்டுமானப் பணியை தொடங்கி முடித்தால், சுமார் 50 முதல் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும். மேல்புறம் 42 கி.மீ. மேகதாது வரையிலும், வடக்கே 20 கி.மீ. தூரம் அஞ்செட்டி வரையிலும் இரு பிரிவுகளாக தண்ணீர் சேமிப்பு பகுதிகளாக தேக்கி வைக்க முடியும்.

இருபுறமும் உயர்ந்த மலைக்குன்றுகளும், அடர்ந்த காட்டுப் பகுதியும் இருப்பதால் குறைந்த செலவில் விரைவாக அணை கட்டி முடிக்க முடியும்.  தமிழகத்தின் பெரும்பகுதியின் குடிநீர் தேவையையும், காவிரி டெல்டாவின் குறுவை, சம்பா சாகுபடியையும் உறுதி செய்ய முடியும்.  பொருளாதாரமும் மேம்படும்.

எனவே, இத்திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு விரைவில் முன்மொழிய வேண்டும். தமிழகம் தண்ணீரை சேமிக்கும் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிக்க ஆணையம் தயாராக உள்ளது.

மத்திய அரசும் தேவையான நிதி ஒதுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டி, தமிழகத்துக்கு தண்ணீர் தருவேன் என்று கூறிவரும் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ராசிமணல் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்று நம்பலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x