சிட்கோ சார்பில் ரூ.133.32 கோடியில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம், தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்துவைத்தார்

சிட்கோ சார்பில் ரூ.133.32 கோடியில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம், தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்துவைத்தார்
Updated on
1 min read

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) சார்பில் ரூ.133.32 கோடி மதிப்பில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம், தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், புதிய தொழிற்பேட்டைகள், பொது வசதி மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிட்கோ மூலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் சேலம் அரியகவுண்டம்பட்டியில் 99,346 சதுரஅடி பரப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.25.34 கோடியில் 102 தொழிற்கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார். இதன்மூலம், 2000 பேர் நேரடியாகவும், 4,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

சிட்கோ மூலம் கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் 1.49 ஏக்கர் பரப்பில் ரூ.32.38 கோடியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 618 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 111 அறைகள் கொண்ட தொழிலாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்ட, வண்டாம்பாளை கிராமத்தில் 18.83 ஏக்கர் பரப்பிலும், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் கிராமத்தில் 27.84 ஏக்கர் பரப்பிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டி கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பிலும், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உமையாள்புரம் கிராமத்தில் 20.07 ஏக்கர் பரப்பிலும், காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தில் 42.06 ஏக்கர் பரப்பிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இவைதவிர, சேலம் மாவட்டம் தாதகாபட்டியில் அச்சுத் தொழில் குழுமத்துக்கு ரூ.13.46 கோடி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் கல்மேட்டில் உப்புத் தொழில் குழுமத்துக்கு ரூ.4.26 கோடி, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் கோவளத்தில் மகளிர் பல்வகை உணவுப் பொருட்கள் குழுமத்துக்கு ரூ.6.65 கோடி, கோவை வெள்ளலூரில் அச்சு வார்ப்புக் குழுமத்துக்கு ரூ.4.44 கோடி, ஈரோடு சிட்கோ தொழிற்பேட்டையில் பொது கிடங்கு குழுமத்துக்கு ரூ.6.52 கோடி என ரூ.35.33 கோடியில்அமைக்கப்பட்டுள்ள 5 புதிய பொது வசதி மையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறைச் செயலர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத் தலைவர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in