Published : 25 Mar 2025 05:02 PM
Last Updated : 25 Mar 2025 05:02 PM
சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக வெங்காயம் வரி விதிப்பால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு இந்தியா முழுவதும் விளையும் பெரிய வெங்காயத்திற்கும், தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சின்ன வெங்காயத்திற்கும் வேறுபாடு தெரியாத அரசாகவே 75 ஆண்டு காலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
பெரிய வெங்காயத்திற்கு உலகளாவிய சந்தை உள்ளது. ஆனால் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் மட்டும் அதற்கான சந்தை உள்ளது.ஒவ்வொரு முறையும் பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தின் போது குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதி வரி விதிப்பை சின்ன வெங்காயத்திற்கும் சேர்த்தே விதிக்கப்படுகிறது.
இதனால், தமிழ்நாட்டு விவசாயிகள் தொடர்ந்து மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சின்ன வெங்காயத்திற்கு தனியாக ஏற்றுமதி குறியீடு எண் உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நீண்ட காலமாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.அதையும் மத்திய அரசு இதுவரை செய்யவில்லை. கடந்த 2023 டிசம்பரில் வெங்காய உற்பத்தி குறைந்து விலை ஏறியதால் மத்திய அரசு ஏற்றுமதிக்காக குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை சந்தை விலையை விட அதிக விலைக்கு நிர்ணயம் செய்தது.
இதன் காரணமாக, இந்தியா முழுவதும் உள்ள சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யும் அனைத்து விவசாயிகளும், சந்தை விலைக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அதன் பின்பு கடந்த 2024 மே மாதம் முதல் கூடுதலாக 20 சதவிகித ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் உற்பத்தி செய்த அனைத்து விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சந்தையிலும் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. வெங்காயம் அதிகமாக உற்பத்தியாகி விலை குறைந்து விவசாயிகள் நஷ்டப்பட்டபோது மத்திய அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு தரவில்லை.பருவநிலை மாற்றத்தின் காரணமாக உற்பத்தி குறைந்து விலை அதிகரித்தது. அப்போது விலை அதிகரிக்காத வண்ணம் சந்தை விலையை விட அதிகமான விலையாக குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயித்து, 20 சதவிகித வரி விதித்தும் பழி வாங்கியது. இதை ஏன், என்று விவசாய சங்கங்கள் கேட்டபோது, மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க வேண்டும் என பதிலளித்து விவசாயிகளை கடுமையான சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டது.
நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை மத்திய அரசு விநியோகிக்க, வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் கொள்முதல் செய்து, நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு ஏற்றுமதிக்கு விலை நிர்ணயம் செய்வது, வரி விதிப்பது என்பதெல்லாம் விவசாயிகளை பழிவாங்கும் செயலாகும்.
தற்போதாவது மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 20 சதவிகித ஏற்றுமதி வரியை நீக்கி உள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள வெங்காயம் உற்பத்தி செய்த அனைத்து விவசாயிகளும் மத்திய அரசினுடைய இந்த நடவடிக்கையால் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.
சந்தை விலைக்கும், குறைந்தபட்ச ஏற்றுமதி வரைக்கும் உள்ள வேறுபாடு, 20 சதவிகித வரி ஆகியவற்றால் விலையை குறைத்து வியாபாரிகள் விவசாயிகளிமிருந்து வாங்கியதால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.எனவே மத்திய அரசினுடைய விவசாயிகள் விரோத செயலால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT