'தமிழகத்தில் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களை சேர்த்து அமைக்க முடிவு': மின்வாரிய அதிகாரிகள்

'தமிழகத்தில் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களை சேர்த்து அமைக்க முடிவு': மின்வாரிய அதிகாரிகள்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 'ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் அமைக்கப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதால், தற்போது அவற்றின் செயல்திறன் மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு அங்கு 'ஹைபிரிட்' முறையில், அதாவது, ஒரே இடத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேத்தனூர், மதுரை மாவட்டத்தில் உள்ள புளியங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு மற்றும் கயத்தாறு ஆகிய இடங்களில் உள்ள 17 மெகாவாட் திறன் கொண்ட 110 காற்றாலைகள் அகற்றப்படும். பழைய காற்றாலைகள் அமைந்துள்ள இடங்களில் தற்போது 22 மெகாவாட் திறனில் காற்றாலை மற்றும் 18 மொவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்களை, பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்புடன் அமைக்க, மின்வாரிய இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, தமிழக அரசிடம் அனுமதி பெறப்பட உள்ளது. இதன் மூலம், மின்நிலையம் அமைப்பதற்கான இடத்தை தனியார் நிறுவனத்துக்கு மின்வாரியம் குத்தகைக்கு வழங்கும். அந்த இடத்தில் நிறுவனம் தன் சொந்த செலவில் மின்நிலையம் அமைத்து 25 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். அந்த நிறுவனத்திடம் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்யும்.

காற்றாலை மற்றும் சூரியசக்தி ஆகிய இருவகை மின்சாரத்துக்கும் ஒரு யூனிட்டுக்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து, அதை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வரும் நிறுவனத்துக்கு ஆணை வழங்கப்படும். கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய விரைவில் டெண்டர் விடப்படும். மேலும், ஒரே இடத்தில் இரு மின்நிலையம் அமைக்கப்படுவதால் ஏற்கனவே மின்வழித் தடம் இருப்பதால், புதிய வழித் தடம் அமைக்கத் தேவையில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in