

சிவகங்கை: “எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணியாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். போராட்டம் அறிவிப்போரை முன்கூட்டியே கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கக் கூடாது. மத்திய அரசு டெல்லியில் இடம் ஒதுக்கி போராட்டம் நடத்த அனுமதிப்பதை போன்று, தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டும்,” என சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் சிவகங்கை, மானாமதுரை சட்டப்பேரவை தொகுதிகளில் நகர வார்டு, கிராம கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியது: “மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பை தற்போது செய்யாவிட்டாலும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் மேற்கொள்ளும். இதனால் வடக்கே பெரும்பாலான மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கும். இது ஆபத்தானது. இதற்காக இப்போதே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டம் கூட்டியதை வரவேற்கிறேன். இந்தக் கூட்டம் குறித்து அண்ணாமலை கூறியது சில்லித்தனமான கருத்து.
உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக வெளியானது குறித்து ‘கொலீஜியம்’ தான் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்திருப்பது வருத்தமளிக்கிறது. அதிலும் பிரதான சாலையில் பட்டப்பகலில் கொலை செய்வது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற பின்னர் சட்டம் தன் கடமையை செய்யும் என்று மாமூலாக கூறுவதை விடுத்து, முதல்வரும், டிஜிபியும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணியாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். போராட்டம் அறிவிப்போரை முன்கூட்டியே கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கக்கூடாது. மத்திய அரசு டெல்லியில் இடம் ஒதுக்கி போராட்டம் நடத்த அனுமதிப்பதை போன்று, தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்துக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, தொகுதி பொறுப்பாளர்கள் சோணை, ஜான்பால், முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், நகரத் தலைவர்கள் விஜயகுமார், புருஷோத்தமன், வட்டாரத் தலைவர்கள் மதியழகன், உடையார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.