Published : 14 Jul 2018 07:27 AM
Last Updated : 14 Jul 2018 07:27 AM

உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மருத்துவ படிப்புக்கு கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும்: முதல்வருக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

நீட் தேர்வு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில், மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும் என முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு அவர் நேற்று அனுப் பிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. எனவே, தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்திவைத்து புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். இதனால், நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை தமிழக கல்வி அமைச்சரும் வரவேற்றுள்ளார் என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும்போது தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், ஏற்கெனவே கலந்தாய்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த தமிழக மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். எனவே, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும். இதற்காக இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு விண்ணப்பித்து அவர்களின் அனுமதியையும் பெற வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x