

சென்னை: மின்கம்பி அறுந்து விழுந்ததால், பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் 6 மணி நேர தாமதத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு நடைபெற்றது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை சுரங்கப்பாதையாகவும் அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை உயர்மட்ட பாதையாகவும் அமைகிறது. 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன.
இதில், பூந்தமல்லி-போரூர் இடையே வரும் டிசம்பர் மாதத்துக்குள் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்தத் தடத்தில் பூந்தமல்லி-முல்லைத் தோட்டம் இடையே 3 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் 6 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறவில்லை. மாலை 6.30 மணியளவில், அந்த வழித்தடத்தில் உள்ள மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. மின் இணைப்பு பெட்டியில் இருந்து தீப்பொறிகள் பறந்தன. இதையடுத்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அத்துடன் ரயில் சோதனை ஓட்டமும் நிறுத்தப்பட்டது.
பின்னர், ஒப்பந்த ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்தனர். இதையடுத்து, இரவு 11.30 மணிக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. 11.30 மணிக்கு பூந்தமல்லி பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் 11.45 மணிக்கு முல்லைத் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
15 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வரும் நாட்களிலும் மேற்கொள்ளப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொது மேலாளர்கள் ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ ரயில் சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்பு), எஸ்.அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ஆலோசகர் எஸ்.ராமசுப்பு (மெட்ரோ ரயில் இயக்கம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.