

பாம்பனில் ரயில் போக்குவரத்து தொடங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தஞ்சாவூர்-விழுப்புரம் இடையேயான இரட்டை வழி ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் வழியாக திருச்சி-சென்னைக்கு பகல் நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சில ரயில்கள் கும்பமேளாவுக்கு இயக்கப்பட்ட நிலையில், அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த தடத்தில் ஏற்கெனவே சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில், கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மகாமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ. 100 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். ஜூலை மாதத்தில் தொடங்கி 2026 டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்படும். கும்பகோணம்- விருத்தாசலம் வரையிலான புதிய ரயில் பாதை குறித்து முடிவு எடுக்கவில்லை.
பாம்பன் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்துவிட்டது. இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.