

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சியில் உலகத் தரத்தில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் 1.97 லட்சம் சதுரஅடி பரப்பில், ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் நூலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இங்கு தரை மற்றும் 7 தளங்களுடன் கூடிய நூலகக் கட்டிடம் ரூ. 235 கோடியிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் ரூ.50 கோடியிலும், தொழில்நுட்பச் சாதனங்கள் ரூ.5 கோடியிலும் அமைக்கப்பட உள்ளன. இந்த நூலகத்தில், உலகத் தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், கலை, கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் நூல்கள், பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள் உள்ளிட்வை இடம்பெறவுள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்திரமோகன், பொதுப்பணித் துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.