“சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்யாமல் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது திமுக அரசு” - ஹெச்.ராஜா

“சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்யாமல் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது திமுக அரசு” - ஹெச்.ராஜா
Updated on
1 min read

காரைக்குடி: சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்யாமல் அரசியல் பழிவாங்கும் செயலில் தமிழக அரசு ஈடுபடுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. ஆனால் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வாங்குகிறீர்கள். மீதி ரூ.1.22 லட்சம் கோடி எதற்கு கடன் வாங்குகிறீர்கள். ரூ.75 ஆயிரம் கோடி வட்டி கட்டும் அளவுக்கு கடன் வாங்கியது ஸ்டாலின் தான். தமிழக பட்ஜெட் பொருளாதார ரீதியாக தமிழகத்திற்கு ஒரு மரண சாஸ்திரம்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு உச்சத்துக்கு சென்றுவிட்டது. கருணாநிதிக்கு பாதுகாலராக இருந்த காவல் அதிகாரியையே கொலை செய்துள்ளனர். காரைக்குடியில் பட்டப்பகலில் இளைஞரை கொலை செய்துள்ளனர். திமுக ஆட்சியில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதற்காக முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

பாஜகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால், சட்ட விரோதமாக செயல்படுவோரை எப்படி காவல்துறை கட்டுப்படுத்த முடியும். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்யாமல் அரசியல் பழிவாங்கும் செயலில் தமிழக அரசு ஈடுபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in