

இளையான்குடி: “கொலைச் சம்பவங்களில் பிஹாரை விட தமிழகம் மோசமாக மாறிவிட்டது,” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று மன நிறைவு அடைந்து கொள்ளலாம். கடந்த ஆட்சியை விட திமுக ஆட்சி மோசமாக உள்ளது. தொடர்ந்து கொலைகள் நடைபெறுவதால் தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக உள்ளது. பிஹாரில் தான் சாதாரணமாக கொலை நடந்து வந்தன. தற்போது தமிழகம் அதைவிட மோசமாகவிட்டது. போலீஸாருக்கு கூட பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. டெல்லியில் ரூ.150 கோடி ஊழல் செய்ததற்கே அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தனர். ஆனால் தமிழகத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதேபோன்று ரேஷன் கடைகளில் அரிசி ஏற்றி, இறக்கும்போது வீணாகியதில் ரூ.950 கோடிக்கு இழப்பு ஏற்பட்டதாக சொல்கின்றனர். அதற்கு எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்பதை ஏற்க முடியாது. திராவிடத்துக்கு எதிரானதுதான் தமிழ் தேசியமே. திராவிடம் தமிழ் மொழியை வைத்து பிழைக்கும். நீட் தேர்வு, கச்சத்தீவு பிரச்சினைகளை விட்டுவிட்டு வருமா? வராதா? என்று தெரியாத தொகுதி சீரமைப்பு பிரச்சினையை பேசி வருகின்றனர். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் படிக்க வாய்ப்பில்லை.
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிவிட்டு, அதில் உள்ள இல்லம் தேடி கல்வியை செயல்படுத்தினர். இண்டியா கூட்டணியினர் ஆளும் மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது திமுக ஏன் தயக்கம் காட்டுகிறது? திமுக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுவிப்பதாக கூறிவிட்டு, தற்போது ஆளுநர் மீது பழிபோடுகின்றனர். தமிழகத்தில் அனைவருக்கும் சமமான இலவச கல்வி, மருத்துவம், குடிநீர் இல்லை.
பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் கடன் மட்டும் ரூ.9.50 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகம் கடனின் தான் முன்னிலை வகிக்கிறது. ஆனால் எந்த தகுதியும் இல்லாமல் நான் தான் நம்பர் ஒன் முதல்வர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கொலை, கொள்ளை, ஊழல் குறித்த திமுக கூட்டணி கட்சியினர் வாய் திறந்தால், நான் கூட்டணி வைக்க தயாராக உள்ளேன்,” என்று அவர் கூறினார்.