

ராமேசுவரம்: ராமேசுவரம் கோயிலில் வட மாநில பக்தர் உயிரிழந்ததைக் கண்டித்து இந்து முன்னணி சார்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்த வட மாநில பக்தர்க ஒருவர் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோயில்களில் தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் சிலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கோயில்களில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு தரிசன வழியில் காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, பக்தர்கள் ஓய்வு பெறுவதற்கான வசதி, போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், வரிசையில் வரும் பக்தர்களை கண்காணிக்கத் தவறிய இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து ராமேசுவரம் என்.எஸ்.கே வீதியில் இந்து முன்னணி சார்பாக இன்று (மார்ச் 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சக்திவேல், நகர் தலைவர் நம்பிராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் மேகநாதன், நாராயணன் குமார், கார்த்திக் வராகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டதில் ஆர்.எஸ்.எஸ், விஹெச்பி, பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.