டாஸ்மாக் மதுபானக் கடைகளில் முதல்வர் படத்துடன் கூடிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டிய பாஜக மகளிரணியினர்

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் முதல்வர் படத்துடன் கூடிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டிய பாஜக மகளிரணியினர்
Updated on
1 min read

திருநெல்வேலி: மது போதைக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவத்துவதற்காக, ‘போதையின் பாதையில் செல்லாதீர்கள் - பேரன்புமிகு அப்பா’ என்ற வாசகங்களுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கரை தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு ஒட்டும் போராட்டத்தை பாஜக அறிவித்தது.

அதன்படி, தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளின் முன்பு பாஜக மகளிரணியினர் ஒட்டிய ஸ்டிக்கரை அப்புறப்படுத்திய புளியங்குடி போலீஸார், இது தொடர்பாக 13 பேரை கைது செய்தனர்.

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், முன்னாள் மேயர் புவனேஸ்வரி ஸ்டிக்கர் ஒட்டினார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு, ஆம்பூர் பாஜக நகராட்சி கவுன்சிலர் லட்சுமிப்ரியா நேற்று ஸ்டிக்கர் ஒட்டினார். சிவகங்கை பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் பாஜக மகளிரணி பொதுச் செயலாளர்

ஹேமாமாலினி பீட்டர் தலைமையிலான கட்சியினர், முதல்வர் ஸ்டாலின் படம் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடை வளாகத்தில் உள்ள இரும்புக் கதவின் மீது சோளிங்கர் பாஜக மகளிரணி நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய ஸ்டிக்கரை நேற்று ஒட்டினர்.

கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்டிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மண்டலத் தலைவர் அர்ஜுனன் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற மகளிரணி மாநகரத் தலைவி சுமதிஸ்ரீ உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக மகளிரணி மாவட்டத் துணைத் தலைவர் மல்லிகா உள்ளிட்ட 3 பேரையும், இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 17 பேரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in