ஸ்டாலின் - வைகோவின் கருத்துகள் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது: பாஜக

ஸ்டாலின் - வைகோவின் கருத்துகள் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது: பாஜக
Updated on
1 min read

ஸ்டாலின் - வைகோ உறவு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என தமிழக பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்காக இந்திய ராணுவம் இலங்கை கடற்படையுடன் இணக்கமாக இருந்து வருவதாக மாநிலங்களவையில் வைகோ அவதூறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய். மேலும், இந்திய ராணுவத்தின் மீது அவதூறு பரப்பும் முயற்சி ஆகும்.

வைகோவின் கருத்து, இந்திய ராணுவம் மற்றும் கடற்படையை அவமதிக்கிறது. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், இந்திய அரசு மீது மக்களின் அதிருப்தியை உருவாக்குவதற்கும், இரு பிரிவினரிடையே பகை, வெறுப்பை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது.

திமுக தலைவரும், வைகோவும் இந்திய ராணுவத்துக்கு எதிராக மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவர்களது உறவு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது. வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் அவர் மீது வழக்குத் தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in