

திருநெல்வேலி: ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை நெல்லை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி (60), நெல்லையில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். நிலப் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தில் போலீஸாரால் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியான முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை தனிப்படை போலீஸார் தேடிவந்தனர்.
இதற்கிடையில், `இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவரது உறவினர்கள் நேற்று காலை நெல்லை டவுனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையர் கீதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, ஜாகிர் உசேன் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியான முகமது தவுபிக் நெல்லை அருகே ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருப்பது நேற்று மாலை தெரியவந்தது. தனிப்படை போலீஸார் அங்கு சென்று அவரை சுற்றிவளைத்தபோது, முகமது தவுபிக் அரிவாளால் போலீஸாரை தாக்கினார். இதில் தலைமைக் காவலர் ஆனந்த் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் முகமது தவுபிக்கின் இடதுகாலில் காயம் ஏற்பட்டது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த முகமது தவுபிக், தலைமைக் காவல் ஆனந்த் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வாளர் சஸ்பெண்ட்: இதனிடையே, பணியில் அலட்சியமாக இருந்ததாக நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுன் சரக முன்னாள் காவல் உதவி ஆணையரும், தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையருமான செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி எம்.பி. நேற்று மாலை ஜாஹிர் உசேன் பிஜிலியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் உறுதி: தமிழக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசும்போது, "நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் எஸ்.ஐ., தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஏற்கெனவே போலீஸில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
எம்எல்ஏ-க்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), முகமது ஷாநவாஸ் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோரும் இச்சம்பவம் தொடர்பாக பேசினர்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "இக்கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் என அனைவர் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்காது. இந்த கொலை வழக்கு மட்டுமல்ல, எந்த குற்றத்தில் ஈடுபடுபவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது" என்றார்.