

சென்னை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றும்படி கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி, மதரீதியிலான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்கு அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜன.27-ம் தேதி உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் கடந்த மார்ச் 6-ம் தேதி தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தம் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்கள், பொது இடங்களில் வைத்துள்ள திமுக கொடிக்கம்பங்களை மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட கொடிக்கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.