

இளையான்குடி: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை இளையான்குடிக்குள் நுழையவிடாமல் போலீஸார் தடுத்ததால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு காரில் சென்றார். அப்போது அவர் இளையான்குடிக்குள் செல்ல முற்பட்ட போது, அவரை இளையான்குடி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். நகருக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. புறவழிச்சாலை வழியாக செல்லுமாறு தெரிவித்தனர். இதையடுத்து பாஜகவினர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஹெச்.ராஜா பேசுகையில், “இளையான்குடி என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா? காவல் துறை இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறது. எதற்காக எனக்கு தடை விதிக்கிறீர்கள். இந்த பகுதியில் செல்ல கூடாது என்று தடை ஏதும் உள்ளதா? காவல் துறை எதற்கு இருக்கிறீர்கள். கோயில்களில் இந்துகள் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர். அதை தடுக்க முடியவில்லை. செல்ல அனுமதிக்காவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம்” என்றார். இதையடுத்து அவரை நகர் வழியாக செல்ல போலீஸார் அனுமதித்தனர்.
இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “ஏற்கெனவே 2012-ம் ஆண்டு இளையான்குடியில் ஹெச்.ராஜா தலைமையிலான பாஜகவினரின் போராட்டத்தில், ஒருதரப்பினர் தாக்குதல் நடத்தியதால் பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு இளையான்குடியில் பாஜகவைச் சேர்ந்த வேலுர் சையது இப்ராஹிம் டீ குடித்து கொண்டிருந்தபோது, அவரது காரை ஒருத்தரப்பினர் சேதப்படுத்தினர். அதேபோன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக தான் நகர் வழியாக செல்ல அனுமதி மறுத்தோம்” என்று கூறினர்.