

ராமநாத சுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க தரிசனத்தின்போது, கட்டண தரிசன வரிசையில் வந்த வடமாநில பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்தாஸ் (59). இவர் நேற்று ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலை ஸ்படிக லிங்க தரிசனத்துக்காக ரூ.50 கட்டணம் செலுத்தி, தரிசன வரிசையில் சென்றுள்ளார். அம்பாள் நுழைவு மண்டபம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த ராஜ்தாஸை, கோயில் காவலர்கள் முதலுதவி மையத்தில் சேர்த்தனர். மருத்துவர் சோதனை செய்ததில், அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ராமேசுவரத்துக்கு தனியாக வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறும்போது, "ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம், தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, பக்தர்கள் ஓய்வு பெறுவதற்கான வசதி போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ராமேசுவரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் செந்தில்வேல் வெளியிட்ட அறிக்கையில், "ராமநாத சுவாமி கோயில் முழுவதும் காற்றோட்டம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்புக்காக எச்சரிக்கை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு உயிரிழந்த பக்தரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.