சீமான் மீதான 50+ வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

சீமான் | கோப்புப்படம்
சீமான் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பெரியாரை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி தினமும் ஒரு காவல் நிலையத்தில் இருந்து சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரியார் தொடர்பான பேச்சுக்காக தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சங்கர் ஆஜராகி, “பெரியார் குறித்து சீமான் வடலூரில்தான் பேசினார். ஆனால் அந்த பேச்சுக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது போலீஸார் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். பெரியாரை இழிவுபடுத்தி சீமான் ஒருபோதும் பேசவில்லை. பெரியார் பொதுக் கூட்டங்களில் பேசியது, நாளிதழ்களில் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் அடிப்படையில்தான் சீமான் பேசினார். எனவே இந்த வழக்குகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும்,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் புகார்தாரர்கள் யார்? வழக்கு எண்களின் விவரங்கள் என்ன? உள்ளிட்டவை இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை திரும்பப் பெற்று முழு விவரங்களுடன் மீண்டும் மனுவை தாக்கல் செய்யுங்கள்” என அறிவுறுத்தினார்.

அதற்கு சீமான் தரப்பில், “ஆன்லைனில் வழக்கு விவரங்களைப் பார்த்து விடக் கூடாது என்பதற்காக அந்த விவரங்களை போலீஸார் மறைத்துள்ளனர். எனவே 50-க்கும் மேற்பட்ட வழக்குகளின் விவரங்களை சேகரித்து தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்,” என்றார்.

ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி, “இந்த மனுவில் எந்தெந்த காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்ற எண்கள் குறித்து எந்த விவரமும் இல்லை. சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களைக்கூட எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை. இந்த சூழலில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க இயலாது,” என மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in