நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

ஜாகிர் உசேன் பிஜிலி
ஜாகிர் உசேன் பிஜிலி
Updated on
1 min read

சென்னை: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த அலட்சியப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் பிஜிலி இன்று (மார்ச் 18) அதிகாலை ஒரு கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றியவர்.

இவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் முர்த்தின் ஜஹான் தைக்காவுக்கு சொந்தமான 32 செண்ட் வக்பு இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த சட்டரீதியாக போராடியதே காரணமாகும் என கூறப்படுகிறது. வக்பு சொத்தை சட்டரீதியாக மீட்கும் முயற்சியில் உள்ள தனக்கு எதிராக ஒரு குழு கொலை திட்டம் மேற்கொண்டு வருவதாக அவர் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் யார் யாரெல்லாம் அந்த சொத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள், யாரால் தனக்கு அச்சுறுத்தல் என்கிற விவரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்காத நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த அலட்சியப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in