Published : 11 Jul 2018 01:41 PM
Last Updated : 11 Jul 2018 01:41 PM

சிறு, குறு தொழில்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை: வாசன்

சிறு, குறு தொழில்களைக் காப்பாற்றி, தொழிலாளர்கள் நலன் காக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சிறு குறுந் தொழில்களை வளர்த்து ஏழை, எளிய, நடுத்தர மக்களை உயர்த்திட அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பெரிய தொழிற்சாலைகளையும் நம்பி சிறு, குறு தொழில்கள் நடைபெறுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி படிப்படியாக பாதிக்கப்பட்டு தொழில்களையே நடத்த முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. இதனையெல்லாம் தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் வருத்தத்துக்குரியது.

கடந்த 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தினால் சிறு, குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்படி பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு அரசுத் தரப்பில் இருந்து முழுமையான உதவி கிடைக்கவில்லை. அதே போல இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சரிவர நிவாரணம் கொடுக்கவில்லை. மேலும் வங்கிகளும் வட்டி விகிதத்தைக் குறைத்து வங்கிக் கடன், உதவிகள் செய்ய முன்வரவில்லை. இச்சூழலில் மீண்டும் புயலினால் சிறு, குறு தொழில்கள் பாதிப்படைந்தது. இப்படி வெள்ளம், புயல் ஆகிய 2 பாதிப்பிலிருந்து தொழில்கள் மீள முயற்சிக்கும் நேரத்தில் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மேலும் பாதிக்கப்பட்டது.

இந்தியப் பொருளாதாரத்தில் அதிக பங்களிக்கும் வகையில் செயல்படும் சிறு, குறு தொழில்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக சிறு, குறு தொழில்கள் மூலம் 40 சதவீதம் அளவுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, 45 சதவீத அளவுக்கு ஏற்றுமதியும் நடைபெறுகிறது. எனவே சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக எபிஏ விதிமுறைகளின் படி சிறு தொழிலுக்கு 90 நாள் நிர்ணயித்த ஆணையை 180 நாளாக விரிவுபடுத்த வேண்டும். வங்கிகள் சிறு தொழிலுக்கு பிணை சொத்து கேட்காமல் கடன் வழங்குவதற்கு அரசு பிறப்பித்திருக்கும் ஆணையைப் பின்பற்ற வேண்டும்.சிட்கோ நிறுவனம் தொழில் முனைவோருக்கு குறைந்த விலையில் நிலம் வழங்க வேண்டும். சிறு தொழில் நிறுவனங்களுக்கு - ஒற்றைச் சாளர அனுமதி, கட்டிட அனுமதி, மாசு கட்டுபாட்டுத் துறை அனுமதி, சுகாதாரத்துறை அனுமதி, மின்சார இணைப்பு அனுமதி - இவை எல்லாம் குறுகிய காலத்தில் வழங்க வேண்டும். வங்கிகள் வட்டி விகிதத்தை சிறு தொழில்களுக்கு குறைத்து அளிக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உபகரணங்களை 20 சதவீதம் சிறு தொழில்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற அரசு ஆணையை அமல்படுத்த வேண்டும்.

எனவே தமிழக அரசு சிறு, குறு தொழில்களைக் காப்பாற்றி, வளர்க்கவும், தொழிலில் ஈடுபட முன்வருவோருக்கு ஊக்கம் அளிக்கவும், தொழிலாளர்கள் நலன் காக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x