பாஜக கண்ணாமூச்சி ஆட்டம்: தமிழக வெற்றிக் கழகம் விமர்சனம்

பாஜக கண்ணாமூச்சி ஆட்டம்: தமிழக வெற்றிக் கழகம் விமர்சனம்
Updated on
1 min read

நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு முற்றுகை போராட்டம் என்ற பெயரில் பாஜக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது என தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் செய்யவில்லை. மாறாக, பாஜகவினர், தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை.

நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றபோது என்ன நடந்தது? தமிழகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?

மத்திய மற்றும் மாநிலத்தை ஆளும் கட்சிகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது, பாஜகவின் போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். தவறு இழைத்தவர்களுக்கு, சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in