அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் ஓபிஎஸ்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அண்மைக் கால நடவடிக்கைகள் அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் வகையில் அமைந்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதிமுகவில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட ஒற்றைத் தலைமை சர்ச்சை, பழனிசாமி அதிமுகவை கைப்பற்றி, ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற்றிய நிகழ்வுக்கு பிறகு, பன்னீர்செல்வம் தர்மயுத்தம் 2.0-வை நடத்தி வருகிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் பழனிசாமியை விமர்சித்து வந்தார்.

அதிமுக ஒற்றுமையை வலியுறுத்தி வரும் பன்னீர்செல்வம், பழனிசாமியை எதிர்த்து வந்த நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பின்னர், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து, நேற்று அதிமுக கொண்டு வந்த பேரவைத் தலைவர் அப்பாவுவை நீக்கும் தீர்மானத்தை பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், "நான் அதிமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதால் வாக்களித்தேன்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், திமுக அரசு கடன் பெற்றது தொடர்பான விவாதத்தில் பழனிசாமிக்கு ஆதரவாக, அதிமுக முன்னாள் நிதியமைச்சர் என்ற முறையில் கேள்வி எழுப்பி பேசினார். இதற்கு பழனிசாமி எந்த ‘ரியாக்சனும்’ காட்டவில்லை. இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தலைவர்கள் ‘ஈகோ’வை விட்டுக் கொடுத்து ஒன்றாக வேண்டும் என்பதே தொண்டர்கள், தமிழக மக்கள் விருப்பம் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலால், அதிமுகவில் மீண்டும் இருதரப்புக்கும் இடையில் ஒற்றுமை ஏற்பட்டு சகஜ நிலை திரும்ப தொடங்கி விட்டதோ என்ற பேச்சு கட்சி வட்டாரங்களில் அடிபடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in