

திருச்செந்தூர் கோயிலில் பக்தர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறிய கருத்து, தங்களை வேதனைப்படுத்துவதாக பக்தரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி ஓம்குமார் (50). இவர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்தபோது ஏற்பட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இதையடுத்து பக்தரின் உயிரிழப்புக்கு திமுக அரசும், அற நிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுமே முழுப் பொறுப்பு என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். அதேபோல் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கையில், ‘‘உடல் நலக்குறைவால்தான் தனது கணவர் உயிரிழந்ததாக அவரது மனைவியே எழுதிக் கொடுத்துள்ளார். இறந்தவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’’ என தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சரின் பேச்சு வேதனை தருவதாக, ஓம்குமார் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் மருத்துவ வசதி இல்லை. குடிநீர் வசதிகூட கிடையாது. சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என்பதற்காகவே காவல்துறையினர் கூறியதை அப்படியே எழுதிக் கொடுத்தோம். ஆனால், அமைச்சர் உடல்நிலை சரியில்லாமல் கோயிலுக்கு வந்ததால் இறந்ததாகக் கூறி எங்களை மேலும் வேதனைப்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.