

சென்னை: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுமையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுமையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை காவல் துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல் துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “டாஸ்மாக் ஊழலை மக்களிடத்தில் எடுத்துச் சென்று உண்மையை அம்பலப்படுத்தி வருகிறது தமிழக பாஜக. இதனால் ஆத்திரமடைந்துள்ள திமுக அரசு, பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது. டாஸ்மாக் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.