

கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி கர்நாடகாவில் இருந்து உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் எந்நேரமும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் சூழல் உள்ளது. உபரி நீர் முழுவதும் திறக்கப்படுவதால் காவிரி பாசன பகுதி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 116 அடியை கடந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. கிருஷ்ண ராஜ சாகர் அணை முழுமையாக நிரம்பியதால் உபரி நீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்பட்டுகிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை நேர நிலவரப்படி 119.41 அடியாக உள்ளது. எந்த நேரத்திலும் அணை நிரம்பும் சூழல் உள்ளது. இதையடுத்து சுரங்கம் வழியாக தற்போது திறக்கப்பட்டு வரும் 20,000 கன அடி நீருடன் கூடுதல் நீர் திறக்கபட்டு வருகிறது.
அதன்படி 16 கண் மதகு வழியாக கூடுதலாக 8,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மேட்டூர் கால்வாய் வழியாகவும் 200 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அணை முழுக்கொள்ளளவு எட்டிவிட்டால், உபரி நீர் முழுமையாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படும். இதனால், காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.