Published : 17 Mar 2025 04:13 PM
Last Updated : 17 Mar 2025 04:13 PM
சென்னை: “தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ரயில்வே துறையில் வேலை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க கடுமையான சிரமங்களையும், பொருட்செலவையும் ஏற்க வேண்டியுள்ளது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே துறையில் வேலை வாய்ப்புக்காக மார்ச் 19 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு, தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு, ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, குண்டூர், காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற நகரங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகர், ஹைதராபாத், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் போன்ற நகரங்களிலும் 600 முதல் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தொலை தூரத்தில் ஒரே நகரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதை முன்னுரிமையாக கொண்ட ரயில்வே தேர்வு வாரிய முடிவால் விண்ணப்பதாரர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மார்ச் 18 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கு ஒருநாள் முன்பு நடைபெற உள்ளது. ரயில்வே ஆள்சேர்ப்பு மையம் சென்னையின் கீழ் 493 உதவி லோகோ பைலட் நியமனத்திற்கான கணினி அடிப்படையில் தகுதி பெற்ற மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 6315 ஆகும். இத்தகைய நியமனங்களின் மூலம் இந்திய ரயில்வே 18799 உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப நோக்கமாக உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவிகித விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. குண்டூர் மற்றும கரீம் நகர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட விருதுநகர் மற்றும் சேலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரயில் பயணத்திற்கான உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் பெறுவதில் கடுமையான சிரமங்கள் உள்ளன.
அதுமட்டுமல்ல, தேர்வு எழுதுகிற மைய நகரங்களில் தங்கி தேர்வு எழுதுவதற்கும், குடும்பத்தினருடன் செல்ல வேண்டியிருப்பதால் அதிக பணச்சுமை ஏற்படுகிறது. மார்ச் 19 அன்று தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தெலங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேர்வு முறையின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ரயில்வே துறையில் வேலை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க கடுமையான சிரமங்களையும், பொருட்செலவையும் ஏற்க வேண்டியுள்ளது.
எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இப்பிரச்சினையில் உடனே தலையிட்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கான தேர்வு எழுதும் மையங்களை சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடத்த ஏற்பாடு செய்து, மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT