

ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ரயில்வே வாரியம் வெளியிட்டது. இதில், தெற்கு ரயில்வேயில் 726 காலியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட கணினி வழித்தேர்வு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், தமிழக தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், ரயில்வே தேர்வு வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், ‘இரண்டாம் கட்ட தேர்வு ஒரேகால முறையில், ஒரே மாதிரியான பொதுவான கேள்வித்தாளுடன் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக விண்ணப்பதாரர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாத சூழலில் அண்டை மாநிலங்களில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த இரண்டாம் கட்ட கணினி வழி தேர்வுகளுக்கும் இதே ஒதுக்கீடு முறைதான் கடைபிடிக்கப்பட்டது. இந்த தேர்வுகளில் பங்கேற்கும் பட்டியலின, பழங்குடியின தேர்வர்களுக்கு ரயிலில் இலவச பயண பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.