தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலைய கட்டுப்பாட்டு அறை கேபிள் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்து வெளியான புகை.
தூத்துக்குடி அனல்மின் நிலைய கட்டுப்பாட்டு அறை கேபிள் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்து வெளியான புகை.
Updated on
2 min read

பயங்கர தீ விபத்து காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்தன. இதனால் 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் அருகே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் முதல் அலகு 1979-ல் தொடங்கப்பட்டது. சுமார் 45 ஆண்டுகள் பழமையான இந்த அனல்மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், அனல்மின் நிலையத்தின் 1 மற்றும் 2-வது அலகுகளுக்கான கட்டுப்பாட்டு அறை அருகே பல அடுக்குகளாக இருக்கும் கேபிள் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி நேற்று காலை 10 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் உள்பகுதிகளில் உள்ள கேபிள்களிலும் தீ பரவியதால் முழுமையாக அணைக்க முடிவில்லை. நேற்று மாலை வரை தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

தீ விபத்தில் 1 மற்றும் 2-ம் அலகுகளுக்கான கட்டுப்பாட்டு அறையில் உள்ள கேபிள்கள், உபகரணங்கள், சாதனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் இந்த 2 அலகுகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள 3-வது அலகின் கேபிள் பகுதிக்கு தீ பரவாமல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் 3-வது அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3 அலகுகளிலும் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 மற்றும் 5-வது அலகுகளில் மின் உற்பத்தி பாதிப்பின்றி நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் புகை மண்டலத்தில் சிக்கி மயக்கமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேற்று காலை அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அனல் மின் நிலையத்தின் 1 மற்றும் 2-வது அலகில் பற்றிய தீ முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உள்ளடங்கிய பகுதிகளில் இருந்து தீ ஜுவாலைகள் வந்து கொண்டிருப்பதால், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இரு தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in