

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும், தமுஎகச நிர்வாகியுமான இரா.நாறும்பூநாதன்(64) காலமானார்.
தமிழாசிரியர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தம்மாள் தம்பதியின் மகனான நாறும்பூநாதன் கழுகுமலையில் பிறந்தார். இவரது மனைவி சிவகாமசுந்தரி, தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாறும்பூநாதன் நெல்லையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் ராமகிருஷ்ணன், கனடாவில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது நாறும்பூநாதனுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவரது மறைவு எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற நாறும்பூ நாதன் தமுஎகச மாநில துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எழுதியுள்ள இவர், நெல்லையை மையமாக வைத்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: முற்போக்கு இயக்க எழுத்தாளரான நாறும்பூ நாதன், பொருநை இலக்கியத் திருவிழாவிலும் முக்கியப் பங்காற்றினார். அவரது படைப்புகள் மற்றும் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி 2022-க்கான உ.வே.சா.விருது வழங்கப்பட்டது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அரசியல், இலக்கியத் துறை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு: சுமார் 45 ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றிய நாறும்பூ நாதனின் எழுத்துகள், நெல்லை மாவட்டத்தின் கிராமப்புற வாழ்வின் உண்மைகளை வெளிப்படுத்தின. அவரது இலக்கியம் மற்றும் சமூகப் பணிகள் மறக்க முடியாதவை. அவரது மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, தமிழ் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு.
துணை முதல்வர் உதயநிதி: எழுத்தாளராக மட்டுமன்றி, சமூக செயல்பாட்டாளராகவும் திகழ்ந்த நாறும்பூநாதனின் உயிரிழப்பு, தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இதேபோல, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நெல்லை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.