பாராமுகமாக செயல்படும் செங்கோட்டையனால் பழனிசாமி அதிருப்தி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாராமுகமாக செயல்பட்டு வருவதால், அவர் மீது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு ஆதாரவான குரல்கள் அவ்வப்போது அதிமுகவில் ஒலித்து, மறைந்து வருகிறது. ஒன்றிணைப்பு சாத்தியம் இல்லை என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். ஆனால், செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் கட்சி ஒன்றிணைப்பில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த பிப்.9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கான அழைப்பிதழ், பேனர்களில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை எனக் கூறி, அவ்விழாவில் பங்கேற்பதை செங்கோட்டையன் தவிர்த்தார். அப்போது முதல் பழனிசாமிக்கு எதிரான செங்கோட்டையனின் மனநிலை புகையத் தொடங்கியது.

தற்போது நடந்து வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அது பற்றிய எரியத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. பின்னர் சட்டப்பேரவைக்குள் நுழைந்த பழனிசாமி செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து பழனிசாமி வணக்கம் தெரிவித்தார். அப்போது செங்கோட்டையன் வேண்டா வெறுப்பாக ஒரு வணக்கம் வைத்ததாக கூறப்படுகிறது. பிறகு, பட்ஜெட் உரை தொடங்கும்போது, பழனிசாமியும், ஆர்.பி.உதயகுமாரும் எழுந்து பேரவைத் தலைவரிடம் முறையிட்டனர். அப்போது அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் எழுந்து நின்ற நிலையில், செங்கோட்டையன் எழாமல் அமர்ந்திருந்தார். பின்னர் பழனிசாமி செய்தியாளரை சந்திக்கும்போதும், செங்கோட்டையன் உடன் இல்லை.

நேற்று வேளாண் பட்ஜெட்டின்போது, முன்னதாக வந்த செங்கோட்டையன், அதிமுக அலுவலகத்துக்கு செல்லாமல், பேரவைத் தலைவர் அப்பாவு அறைக்கு சென்று அமர்ந்திருந்தார். பின்னர் பேரவைக்கு வந்தார். பழனிசாமியுடனான சந்திப்பை தவிர்க்கும் வகையில், அவர் வழக்கமாக வந்து செல்லும் 4-ம் எண் நுழைவு வாயிலுக்கு பதில், 3-ம் எண் வாயிலை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இப்படி பாராமுகமாக இருப்பதால் செங்கோட்டையன் மீது பழனிசாமிக்கு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனிசாமியை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்ப்பது குறித்து, பழனிசாமியிடமே நேற்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "அதை அவரிடமே கேளுங்கள்" என்று கோபமாக பதில் அளித்த பழனிசாமி, பின்னர் "அதிமுக சுதந்திரமான கட்சி. திமுக போன்று சர்வாதிகார கட்சி இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் சுதந்திரமாக செயல்படலாம்" என்றும் பதில் அளித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in