அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சாலை மறியல்: மதுரையில் 400 பேர் கைது

மதுரை ஆரப்பாளையத்தில் இன்று அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் ஏயுடி மற்றும் மூட்டா சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை ஆரப்பாளையத்தில் இன்று அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் ஏயுடி மற்றும் மூட்டா சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் இன்று அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் 4 ஆண்டுகளாக ஊதியம் வழங்காததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. இதில் பெண் பேராசிரியர்கள் உட்பட 400 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பல்கலைக்கழக மானியக்குழு, 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணி மேம்பாட்டுக்கான அரசாணை 2021-ல் வெளியிடப்பட்டது. அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் நிலுவையுடன் வழங்கப்பட்டது. ஆனால் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணைப்பேராசிரியர் உள்ளிட்ட பணிமேம்பாட்டிற்கான ஆணை மட்டும் வழங்கி ஊதியம் வழங்கவில்லை.

இந்நிலையில், 4 ஆண்டுகளாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், காலதாமதமின்றி பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கக்கோரியும் இன்று அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் ஏயுடி மற்றும் மூட்டா சங்கங்கள் சார்பில் ஆரப்பாளையம் குரு தியேட்டர் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு ஏயுடி தலைவர் காந்திராஜன், மூட்டா தலைவர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏயுடி பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், மூட்டா பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் பேசினர். மறியல் போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் லெனின் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் நீதிராஜன், எல்ஐசி ஊழியர் சங்க செயலாளர் ஜி.மீனாட்சி சுந்தரம், டான்சாக் மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மூட்டா முன்னாள் தலைவர் பெ.விஜயகுமார், அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டலச் செயலாளர் கிரிஸ்டல் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏயுடி பொருளாளர் சேவியர் நன்றி கூறினார். சாலை மறியலில் பெண் பேராசிரியர்கள் உட்பட 400 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in