

தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் எஸ்ஆர்எம் நிறுவன பஸ்களின் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி சென்னையில் திங்கள்கிழமையன்று தொடங்கியது.
எஸ்ஆர்எம் நிறுவனத்தின் பஸ்களில் பயணம் செய்ய தபால் நிலையங்களில் முன்பதிவு செய்வதற்கான வசதி சென்னை யில் நேற்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தபால் துறையின் தமிழ்நாடு கோட்டம் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எஸ்.சி.பிரம்மா கூறும்போது, ‘‘தபால் துறைக்கு கூடுதல் வருவாய் பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1854ம் ஆண்டு வெறும் 700 தபால் நிலையங்களுடன் தொடங்கப்பட்டது. இப்போது, நாடுமுழுவதும் 1.50 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டுமே 2,500 தபால் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது எஸ்ஆர்எம் நிறுவன பஸ்களின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள தற்போது 94 தபால் நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் அருகே உள்ள தபால் நிலையங்களில் இருந்து ஆம்னி பஸ் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். மக்களின் வரவேற்பை பொருத்து எஞ்சியுள்ள தபால் நிலையங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படும். இந்த சேவைக்கு மக்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. இந்த சேவைக்கான கமிஷன் தொகை எஸ்ஆர்எம் நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளப்படும்’’ என்றார்.
எஸ்ஆர்எம் குழும தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், ‘‘கடந்த 1999 ஆம் ஆண்டு எஸ்ஆர்எம் டிரான்ஸ்போர்ட் 2 பஸ்களுடன் தொடங்கப்பட்டது. மொத்தம் 500 பஸ்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு வழித்தடங் களில் பஸ் சேவை அறிமுகப்படுத்த உள்ளோம்.’’ என்றார்.