டாஸ்மாக் விவகாரத்தில் சத்தீஸ்கரை விட தமிழகத்தில் மிகப்பெரிய மதுபான ஊழல்: அண்ணாமலை திட்டவட்டம்

டாஸ்மாக் விவகாரத்தில் சத்தீஸ்கரை விட தமிழகத்தில் மிகப்பெரிய மதுபான ஊழல்: அண்ணாமலை திட்டவட்டம்
Updated on
2 min read

சென்னை: டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என்றும், சத்தீஸ்கரை விட தமிழகத்தில் மிகப்பெரிய மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் நிறுவனம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், பாட்டில் உற்பத்தி நிறுவனங்கள் என மூன்று நிறுவனங்கள் உள்ளன. இதில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 40 சதவீதம் மதுபானம் முறையான வழியில் வரவில்லை என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக விற்கப்படுவது. இரண்டாவது, டாஸ்மாக் அதிகாரிகள் முறைகேடான முறையில் மதுபான ஆலைகளுக்கு ஒப்பந்தம் கொடுத்து மதுபானங்களை கொள்முதல் செய்து, அந்த மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பும்போது பணம் பெற்றுக் கொண்டு அனுப்புவது.

மூன்றாவது, பணியாளர்களின் பணியிட மாற்றத்துக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது என லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி உள்ளது. சோதனை முடிவில், அமலாக்கத் துறை தரப்பில், டாஸ்மாக் போக்குவரத்தில் ரூ.100 கோடி அளவிலான ஊழல் நடைபெற்றுள்ளது எனவும், மதுபான உற்பத்திக்கான பொருளை வாங்கும்போது போலி கணக்கு எழுதியுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

மதுபான ஆலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் மதுபானங்களைத் தயாரிக்கிறது. அதற்கு கூடுதலாக பாட்டில்கள் தேவைப்படுவதால், போலி பாட்டில்கள், மூடிகள், ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளன.

இது சத்தீஸ்கரில் நடந்த மதுபான முறைகேடு போன்றதுதான். தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தைப் பொறுத்தவரை, எவ்வளவு ஸ்டிக்கர் கொடுத்தோம், எவ்வளவு ஸ்டிக்கர் திரும்ப வந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் தனி நெட்வொர்க் மூலம் இந்த முறைகேட்டை நடத்தி உள்ளனர்.

மேலும், மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவில் தயாரித்த மதுபானத்துக்கே அதிக கணக்கு காட்டி உள்ளனர். இதை, அந்த நிறுவனத்தின் மின் கட்டணத்தை வைத்தே கண்டுப்பிடித்து விடலாம்.

சத்தீஸ்கரில் இப்படித்தான் மதுபான முறைகேடு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு நடந்திருப்பதால்தான் பாஜக இதை தைரியமாகப் பேசுகிறது. சத்தீஸ்கரை தாண்டி மிகப்பெரிய ஊழல் தமிழகத்தில் நடந்துள்ளது. இவர்கள் எங்கேயும் தப்பித்துச் செல்ல முடியாது. அமலாக்கத் துறை இந்த விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும்.

இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். குறிப்பாக செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே போக்குவரத்துத் துறையில் ஊழல் செய்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இன்னொரு துறை, மீண்டும் அமலாக்கத் துறையிடம் சிக்கி உள்ளது கேலிக்கூத்தாக இருக்கிறது.

எனவே, ரூ.1000 கோடி ஊழலை கண்டித்து சென்னையில் வரும் 17-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன்பின் ஒரு வாரம் கழித்து, தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

2 அமைச்சர்களை நீக்க வேண்டும்: டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பாமகதலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையில் சில ஊழல்கள் வெளி வந்துள்ள நிலையில், இன்னும் பெருமளவிலான ஊழல்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். டாஸ்மாக் ஊழல்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை.

டாஸ்மாக் ஊழலுக்கு காரணமான மதுவிலக்குத் துறையின் இன்றைய அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். டாஸ்மாக் விவகாரத்தில் மூல குற்றச்சாட்டுகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in