

தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த ஆண்டு 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த வீடற்ற, நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா தருவதை அரசு தன் முன்னுரிமை கொள்கையாக கொண்டுள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும்.
சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றியப் பகுதிகளில் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தகுதியுடைய குடும்பங்களுக்கும், அதேபோல் மாவட்டத் தலைநகரின் 16 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பகுதிகள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சியின் 8 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள பகுதிகளில் வீட்டுமனை ஒப்படை வழங்க விதிக்கப்பட்ட தடையாணை ஒருமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
உயர் தெளிவுத்திறன் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் உதவியுடன், பன்முகத் தொழில்நுட்பங்கள் வாயிலாக உயர் தெளிவுத்திறன் பெருவிகித அளவிலான மாநிலத்துக்காக உருவாக்கப்படும். இதன்மூலம் நில அளவை, பேரிடர் மேலாண்மை, திட்டமிடல் மற்றும் இதர உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்த வரைபடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் கூடம், இணைய வசதி, படிப்பகம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தூய்மையான ஓய்வறைகள், மின்னணு நுழைவு அட்டை மற்றும் பரந்த வாகன நிறுத்துமிடம் ஆகிய அனைத்து வசதிகளையும் கொண்டு சென்னை உட்பட மாநகராட்சிப் பகுதிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் நவீனப்படுத்தப்படும்.
பொதுமக்கள் அளித்த 89.58 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: முதல்வரின் முகவரி துறையின் மூலம் இதுவரை பெறப்பட்ட 93.86 லட்சம் மனுக்களில் 89.58 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வுகள் காணப்பட்டுள்ளன.
மனுக்களுக்கு காணப்பட்ட தீர்வுகளின் மீது மனுதாரர்களிடமிருந்து பின்னூட்டங்கள் பெறப்பட்டு உரிய மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே, 15 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று, 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை, இத்திட்டத்தின்கீழ், 21.86 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், பிற குற்றங்களை உடனுக்குடன் கண்டுபிடித்து ஆராய்வதற்கான அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கோடு, சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் இதர முக்கிய நகரங்களான கோவை, திருச்சி, மதுரை, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
குற்றங்களைத் தடுத்திடும் வகையில் சிசிடிவி, முக அடையாளம் காணும் மென்பொருள் அமைப்பு, தானியங்கி வாகன எண் கண்டுபிடிக்கும் மென்பொருள் அமைப்பு, ட்ரோன் கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவு அடிப்படையிலான காணொலி பகுப்பாய்வு அம்சங்களை உள்ளடக்கிய இத்திட்டம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.